ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

சென்னை: ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் உறவினரின் நிலத்தை அடியாட்களை அனுப்பி மிரட்டி அபகரித்ததாக ஜெயக்குமார் மீது புகார் எழுந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் ஒன்று 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ளது. இது யாருக்கு சொந்தம் என்பதில் ஜெயக்குமார் குடும்பத்தில் பிரச்சனை இருந்தது. அதாவது ஜெயக்குமார் மருமகன் நவீன்குமார், அவரது சகோதரர் மகேஷ் இடையே இந்த சொத்து குறித்த பிரச்சனை இருந்தது. பின்னர் மகேஷ் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் அடியாட்கள் மூலம் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்துக் கொண்டனர் என குற்றம்சாட்டிருந்தனர். மேலும் தங்களுக்கு ஜெயக்குமார் தரப்பு கொலை மிரட்டல் விடுத்தது என்பதும் மகேஷின் புகார். இதனடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குறப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை எதிர்த்தும் தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேநேரத்தில் தமக்கு எதிராக மகேஷ் கொடுத்த புகாரால் தமக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது; தம்மை பற்றி அவதூறாக கருத்துகளை வெளியிட்டதால் மகேஷ் தமக்கு ரூ1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜெயக்குமார் மற்றொரு வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்தது. அதேநேரத்தில் ஜெயக்குமாரின் மனுவை நிராகரிக்க கோரி மகேஷ் தரப்பிலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெயக்குமார் தரப்பில், 2016-ம் ஆண்டு நடந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள் கழித்து வழக்கு பதிவு செய்யபப்ட்டிருக்கிறது. என் மருமகன் நவீன்குமாருக்கும் அவரது சகோதருக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இதில் தேவையே இல்லாமல் என்னை சேர்த்துள்ளனர். இது அரசியல் பழிவாங்குதல்.

ஆகையால்தான் மான நஷ்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது என கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 7-ந் தேதி இதே வழக்கில் மற்றொரு மனு மீது விசாரணை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருக்க்கிறது.

Related Stories: