கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக பொழுதை களித்தனர்.கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் குளிக்க முடியும் என்பதாலும் கோபி மட்டுமின்றி ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாகவும், தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், பெரும்பாலான அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் குடும்பத்துடன் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

அதே போன்று அணையின் பூங்காவில் பெண்கள், குழந்தைகள் விளையாடியும், அங்கு விற்பனை செய்யப்படும் சுவையான மீன் வகைகளை சாப்பிட்டும் விடுமுறையை களித்தனர்.  கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் போதிய அளவிற்கு வாகன நிறுத்தம் இல்லாததால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொடிவேரி பிரிவிலேயே வாகனங்களை நிறுத்தி குழந்தை, முதியவர்களுடன் உணவு, உடை போன்றவற்றை சுமந்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது போன்ற காலங்களில் பொதுப்பணித்துறையினர் வாகன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால்  தொடர்ந்து கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Stories: