ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது: ஐநா தலைவர் சாபா கொரோசி பேட்டி

ஐநா சபை: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோசி  தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக இந்தியா புறப்படும் முன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், “ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதன் நிரந்தர உறுப்பு நாடு ஒன்று அண்டை நாட்டின் மீது போர் செய்யும்போது, சண்டை நிறுத்தம், பாதுகாப்பு, சர்வதேச அமைதியை ஏற்படுத்த முடியாமல் முடங்கி உள்ளது.

முன்பு உருவாக்கப்பட்ட ஐநா பாதுகாப்பு கவுன்சில் போர்களை தடுப்பதற்கான முதன்மை பொறுப்பை செயல்படுத்த முடியாமல் உள்ளது. இந்த நிலையை மாற்ற ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என வளர்ந்து வரும் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன” என்று கூறினார். உக்ரைன் மீதான ரஷ்யா போர் பற்றி குறிப்பிட்ட சாபா கொரோசி, ”ஐநாவின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்று அண்டை நாட்டின் மீது போர் தொடுத்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் வீட்டோ அதிகாரம் காரணமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாமல் செயலற்று உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை செய்ய இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் தகுதி இந்தியாவுக்கு உள்ளது” என சாபா கொரோசி மேலும் கூறினார்.

Related Stories: