அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மண்டையை உடைத்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு வலை: கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மண்டையை உடைத்த அதிமுக ஒன்றிய செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே நல்லரசன்பேட்டையை சேர்ந்தவர் உதயசூரியன், அதிமுக கிளை செயலாளர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கோலியனூர் ஒன்றிய அதிமுக செயலாளரும், ஆவின் சேர்மனுமான பேட்டை முருகனிடம் அரசு வேலைக்காக அணுகி, கோலியனூரை சேர்ந்த வீரமுத்து என்பவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை வாங்கி கொடுத்திருந்தார். பல ஆண்டுகளாகியும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உதயசூரியன், அவரது மகன் சதீஷ்குமார் மற்றும் உறவினர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை  கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பேட்டை முருகன், அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து கத்தி மற்றும் தடியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் உதயசூரியன், அவரது மகன் சதீஷ்குமார் மற்றும் சரத்குமார், அய்யனார் ஆகியோரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும்  தடுக்க சென்ற சதீஷ்குமாரின் தாய், சகோதரி, மனைவி உள்ளிட்டவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வளவனூர்போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான அதிமுக ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: