திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற போலி சாமியார் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், போலி சாமியார்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கிரிவலப்பாதையில் நிருதிலிங்கம் அருகே போலீசாரை கண்டதும் சாமியார் வேடத்தில் இருந்த ஒருவர் தப்பிக்க முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த பையில் விற்பனைக்காக இருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதனை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஜீவா நகரை சேர்ந்த ஆறுமுகம்(48) என்பதும், திருமணமான இவர், குடும்பத்தை விட்டுவிட்டு சாமியார் வேடத்தில் ஊர் ஊராக சுற்றி வருவதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது. எனவே, போலி சாமியார் ஆறுமுகத்தை கைது செய்து, திருவண்ணாமலை ஜேஎம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். போலி சாமியார் ஆறுமுகம், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி, இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: