புதுவையில் 30, 31ம் தேதிகளில் ஜி20 மாநாட்டுக்காக 5 இடங்களில் 144 தடை

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜி20 மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வல்லவன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் ஆட்சியர் வல்லவன் கூறுகையில், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு, புதுச்சேரியில் வருகிற 30, 31 தேதிகளில் நடைபெறுகிறது. 30ம் தேதி (நாளை) சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகள் மற்றும் இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துரையாட உள்ளனர்.

மாநாட்டையொட்டி, புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தடை என்பது தவறான தகவல். 2வது நாள் ஆரோவில்லுக்கு சென்று பல்வேறு பகுதிகளை பிரதிநிதிகள் பார்வையிடுவார்கள். மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி விமான நிலையம், அக்கார்டு ஓட்டல், ரெசிடென்சி டவர் ஓட்டல், ரேடிசன் ஓட்டல், சுகன்யா கன்வென்சன் சென்டர் ஆகிய 5 இடங்களில்  இன்று முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: