நியூசிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி தருமா இந்தியா?

லக்னோ: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, லக்னோவில்  இன்று  இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் பரிதாபமாகத் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில்  நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 2 தொடர்களில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்தியா, நடப்பு டி20 தொடரில் அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்காமல் இருந்த இந்தியா, முதல் டி20ல் தோல்வியை சந்தித்துள்ளது. ஹர்திக் தலைமையிலான இந்திய அணி தோல்வியைத் தழுவியதும் இதுவே முதல் முறையாகும்.

நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. ராஞ்சியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. பேட்டிங்கில் வாஷிங்டன், சூரியகுமார் மட்டுமே சிறப்பாக விளையாடினர்.  கேப்டன் ஹர்திக் ஓரளவு சமாளித்தார். மற்ற வீரர்கள் சொதப்பலாக பேட் செய்து ஏமாற்றம் அளித்தனர். வாஷிங்டன் ஆல் ரவுண்டராக அசத்தினார். குல்தீப் சிக்கனமாகப் பந்து வீசிய நிலையில்... ஹர்திக், உம்ரான், அர்ஷ்தீப், மாவி ரன்களை வாரி வழங்கினர். இதனால் இந்திய அணி நிர்வாகம் வியூகத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இஷானுக்கு பதிலாக பிரித்வி அல்லது ருதுராஜுக்கு இடம் கிடைக்கலாம். உம்ரான் நீக்கப்பட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னர் சேர்க்கப்படும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம் நியூசி. அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. கேப்டன் சான்ட்னர் அதிசிக்கனமாகப் பந்துவீசி அசத்தினார். மற்றவர்கள் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை என்றாலும் பெர்குசன், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். பேட்டிங்கில் ஆலன், கான்வே, டேரில் மிட்செல் சிறப்பாக செயல்பட்டனர். பதிலடி கொடுக்க இந்திய அணியும், தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்ற நியூசிலாந்தும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Related Stories: