ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முதல் முறையாக சபலென்கா சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எலனா ரைபாகினாவுடன் (23 வயது, 25வது ரேங்க்) நேற்று மோதிய சபலென்கா (24 வயது, 5வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி ரைபாகினாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த சபலென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 28 நிமிடத்துக்கு நீடித்தது.

ஆஸ்திரேலிய ஓபனில் மட்டுமல்ல, ஒரு கிராண்ட் ஸ்லாம் தொடரில் சபலென்கா பட்டம் வெல்வதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரிசாக ரூ.16.5 கோடியை அவர் தட்டிச் சென்றார். ரைபாகினாவுக்கு ரூ.9.25 கோடி கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகதா - ஜேசன் குப்லர் ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் பிரான்சின் ஹுகோ நிஸ் - ஜன் ஸீலின்ஸ்கி ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. ரிங்கி, ஜேசன் இருவருமே ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் பங்கேற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 9 முறை சாம்பியனான நோவாக் ஜோகோவிச் (செர்பியா), கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இன்று மோதுகின்றனர். 

Related Stories: