அங்கன்வாடி கட்டிடம் இருந்த இடத்தை சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு: வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே துணிகரம்

வேலூர்:  தமிழகத்தில் நீர்நிலை இடங்கள், கோயிலுக்கு சொந்தமான இடங்கள் என்று ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள இடங்களை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் கலெக்டர் உத்தரவின்பேரில் குடியாத்தம் பாலாறு ஒட்டியிருந்த ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், சதுப்பேரி கால்வாய் ஆக்கிரமிப்பு, நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. தொரப்பாடி ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அதேசமயம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தவிர்த்து வேலூர் மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளது.

இதில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிஎம்சி காலனி தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம், அங்கன்வாடி கட்டிடம் இயங்கி வந்தது. அந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக, கடந்த 2021ம் ஆண்டு மாநகராட்சிக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் புதியதாக கட்டப்பட்டது. இதனால், பழைய அங்கன்வாடி கட்டிடம் இடிக்கப்பட்டது. உடனே அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் உள்ள நபர், ஒருவர் தனதுவீட்டுடன் அங்கன்வாடி இடத்தையும் இணைத்து, ஓலை தட்டிகட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆக்கிரமிக்கப்பட்ட ஓலை தட்டிகளை அகற்றினர். அங்கன்வாடி இடத்தை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள இடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் இருந்த இடத்தினை, சிமென்ட் கான்கிரீட் போட்டு மீண்டும் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றிய பின்னரும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அந்த இடத்தை பராமரிக்காததால் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுற்றுச்சுவர் எழுப்பி அதே பகுதியில் உள்ள நபர் ஆக்கிரமித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாநகராட்சி அங்கன்வாடி கட்டிடம் இயங்கி வந்த இடத்தில் தனி நபர், சுற்றுச்சுவர் கட்டி 2வது முறையாக ஆக்கிரமித்துள்ளார். மாநகராட்சி அதிகாரிகள், சர்வே எண் வரைபடம் வைத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தினை உடனடியாக மீட்டு, ஆக்கிரமிப்பு செய்த நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: