சென்னையில் ஒருவார சோதனை கஞ்சா விற்ற 31 பேர் கைது: 67 கிலோ கஞ்சா, ஹெராயின் பறிமுதல்

சென்னை:சென்னையை போதை பொருட்கள் இல்லாத மாநகரமாக உருவாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாநகரம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை சென்னை மாநகர காவல் எல்லையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கஞ்சா வியாபாரிகள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 67 கிலோ கஞ்சா, 523 போதை மாத்திரைகள், 4 கிராம் மெத்தபெட்டமைன், 3 கிராம் ஹெராயின், 4 செல்போன்கள், 4 பைக்குகள், ஒரு லோடு வாகனம், கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக, முத்தியால்பேட்டை போலீசார் கடந்த 25ம் தேதி ஸ்டான்லி ரவுண்டனா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, லோடு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் (24), உப்பலம்பட்டி அன்ஜி (34), ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த கொண்டா ரெட்டி (32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், வண்ணாரப்பேட்டை போலீசார் சீனிவாசபுரம் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனை செய்த  பெரம்பூர் ராஜிவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி துர்கா தேவி (27), மண்ணடி மூக்கர் நல்லமுத்து தெருவை சேர்ந்த சந்தோஷ் (24), அவரது மனைவி ஆனந்தி (எ) ஹேமா (20), செல்வம் (எ) சிட்டிசன் (21), உமா (39) ஆகியோரை போலீசார் ைகது செய்தனர். அவர்களிடம் இருந்து 12.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: