கான்வே, டேரில் மிட்செல் அரை சதம் நியூசிலாந்து ரன் குவிப்பு

ராஞ்சி: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. ஜேஎஸ்சிஏ சர்வதேச ஸ்டேடிய வளாகத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஃபின் ஆலன், டிவோன் கான்வே இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவரில் 43 ரன் சேர்த்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய 5வது ஓவரில் ஆலன் 35 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), மார்க் சாப்மேன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 43/2 என திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், கான்வே - பிலிப்ஸ் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தனர். பிலிப்ஸ் 17 ரன் எடுத்து குல்தீப் சுழலில் சூரியகுமார் வசம் பிடிபட்டார். அரை சதம் விளாசிய கான்வே 52 ரன் எடுத்து (35 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு முனையில் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க... பிரேஸ்வெல் 1 ரன், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. டேரில் மிட்செல் 59 ரன் (30 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), ஈஷ் சோதி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்னுக்கு 2 விக்கெட், குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன்னுக்கு 1 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப், ஷிவம் மாவி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஹர்திக் (3 ஓவரில் 33 ரன்), உம்ரான் மாலிக் (1 ஓவரில் 16 ரன்) பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அர்ஷ்தீப் 1 விக்கெட் வீழ்த்தினாலும் 4 ஓவரில் 51 ரன் வாரி வழங்கினார். இதையடுத்து, 20 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் துரத்தலை தொடங்கினர்.

Related Stories: