கிருஷ்ணகிரி நகராட்சி டெண்டரில் குளறுபடி பொறியாளர் உள்பட 4 அதிகாரிகள் ‘சஸ்பெண்ட்’

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி டெண்டரில் குளறுபடி மற்றும் உரிமை தொகை செலுத்தாமல் நகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியதால், நகராட்சி அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், கட்டண கழிப்பிடம், நகராட்சி கட்டிடங்கள் குத்தகை உள்ளிட்டவற்றுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம். இதில் குத்தகை இனத்தொகை குறைவாக பதிவு செய்தும், உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இது தொடர்பாக, ஏற்கனவே நகராட்சி இளநிலை உதவியாளர் சரஸ்வதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்க வசூல், புதிய, பழைய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், புதிய பஸ் நிலையத்தில் தட்டுமுறுக்கு விற்பனை, கிழங்கு மற்றும் பூவிற்கும் உரிமம் உள்ளிட்டதற்கான டெண்டர்கள் விடப்பட்டதில், குத்தகை தொகை மிகவும் குறைவான அளவில் கோரப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதில் உரிமை தொகையும் செலுத்தப்படவில்லை. அதிகாரிகள்  இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, டெண்டர் விட்டதில் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்திய நகராட்சி பொறியாளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஞானசேகரன், உதவியாளர் புஷ்பராணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, தமிழ்நாடு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல இதற்கு முன்பு டெண்டர் விட்டதிலும், முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதைய நகராட்சி பொறியாளராகவும், தற்போதைய ஜோலார்பேட்டை நகராட்சி பொறியாளராக உள்ள கோபு என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: