மேலூர் அருகே மணமகளை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற மணமகன்

மேலூர்: மேலூர் அருகே திருமணம் முடிந்தவுடன் மணமகளை, தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்து சென்ற இன்ஜினியர் மணமகனை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகன் கதிர் என்ற கணேஷ். இன்ஜினரியரிங், டிசிஇ படித்த இவர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் இயற்கை ஆர்கானிக் பார்ம் வைத்துள்ளார். இயற்கையாக வாழ வேண்டும், காற்று மாசுபாடு இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இவரது லட்சியம். நேற்று இவருக்கும், மேலநாட்டார்மங்கலத்தை சேர்ந்த பட்டதாரி மணமகள் சிவரஞ்சனிக்கும், கீழையூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் வீட்டிற்கு காரில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை கார் மற்றும் டூவீலரில் அனுப்பிய மணமகன் கதிர், தனது மனைவியான சிவரஞ்சனியை மாட்டுவண்டியில் ஏற்றி கொண்டு, வீட்டிற்கு கிளம்பினார். மணக்கோலத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் சென்றது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. பழமை மாறாமல் இன்னும் ஒரு சிலர் இதுபோல் உள்ளது கிராமத்தின் உயிர்ப்பு தன்மையை நிலை நிறுத்தி வருகிறது.

Related Stories: