காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்: கணவர் புகார்; போலீசார் விசாரணை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பிரவீன்குமார். பி.இ பட்டதாரி. இவர் எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்தார். இருவரும் கடந்த 23ம் தேதி திருமணம் செய்துகொண்டு திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனைதொடர்ந்து பெற்றோரை காவல்நிலையம் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கவுசல்யா, தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் அவரை பிரவீன்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அக்கியம்பட்டியில் உள்ள பிரவீன்குமாரின் வீட்டில் கவுசல்யா இருந்தார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்து கவுசல்யாவை வலுகட்டாயமாக கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து பிரவீன்குமார் சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கவுசல்யாவை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார்?, காதல் திருமணம் செய்தது தொடர்பாக அவரின் பெற்றோர் ஆட்களை வைத்து கடத்தி சென்றனரா? உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: