டெல்லியில் 74வது குடியரசு தின விழா கோலாகலம் ஜனாதிபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார்: எகிப்து அதிபர் எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடெல்லி:  நாட்டின் 74வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.டெல்லி கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள், ஏவுகணைகளுடன் முப்படையினர் கம்பீரமாக அணிவகுத்தனர். சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் எல் சிசி பங்கேற்றார்.

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள ராஜபாதையில் வழக்கமாக குடியரசு தின அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டு சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமை பாதையில்(முன்பு ராஜபாதை) குடியரசு தினவிழா அணிவகுப்பு நடந்தது.

காலை 10.26 மணி அளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் சிறப்பு அழைப்பாளரான எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோர் ஒரே காரில் கடமை பாதைக்கு வருகை தந்தனர்.அவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பிறகு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தலைமை தளபதிகள் உள்ளிட்டோரை அவர்கள் இருவருக்கும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முதல் பழங்குடியின பெண்ணான திரவுபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது  தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி கடமை பாதை முதல் இந்தியா கேட் வரையில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த ஆண்டு அணிவகுப்பில் பெண் சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் வலிமையை காட்டும் வகையில்,  முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள், ஏவுகணைகள்,  ரேடார்கள் உள்ளிட்ட ராணுவ சாதனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. குறிப்பாக  அர்ஜுன் ரக பீரங்கிகள், நாக் ஏவுகணைகள், கே 9 வஜ்ரா பீரங்கிகள் இடம்  பெற்றன. விமானப்படையின் ரபேல், மிக் 29, சுகாய் 30 ரக போர் விமானம் மற்றும் கடற்படையின் ஐஎல் 18 ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் அடுத்தடுத்து பறந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

முப்படையினரின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள், இந்தியாவின் வான் வலிமையை பறைசாற்றும் விமானங்களின் சாகசங்கள் செய்து காட்டப்பட்டது. முப்படையினரின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. பெண் அதிகாரிகள் தலைமையில் படை வீரர்கள் அணிவகுத்தனர். கடற்படையின் லெப்டினென்ட் காமாண்டர் திஷா அம்ரித் தலைமையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டனர். விமானப்படை பிரிவை சேர்ந்த 148 வீரர்கள் ஸ்குவாட்ரான் லீடர் சிந்து ரெட்டி தலைமையில் அணிவகுத்தனர். மேலும் 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதுதவிர ஒன்றிய ஆயுதப்படை, ரயில்வே பாதுகாப்புப்படை, டெல்லி போலீஸ், எல்லைப்பாதுகாப்பு படையின் ஒட்டகப்பிரிவு ஆகியவையும் பங்கேற்று சிறப்பித்தன. தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்றன.உள்நாட்டு திறன்கள், பெண் சக்தி, ராணுவ வலிமை, பன்முகத்தன்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு வாகனங்கள் இருந்தன. விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* பார்வையாளர்களை கவர்ந்த தமிழ்நாடு ஊர்தி

டெல்லியில் நேற்று நடந்த குடியரசுத் தின நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அரசு சார்பாக அலங்கார வாகனம் அணிவகுத்து சென்றது. அது, தஞ்சை பெரிய கோயில் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. சங்க காலம் முதல் தற்போது வரையில் பெண்களின் பங்களிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய விதமாக அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக அவ்வையார், வேலுநாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி, இயற்கை விவசாயி பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தது. வாகனத்தின் இருபுறமும் கிராமிய பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனமாடியபடி சென்றனர். இது கடமை பாதையில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்தது.

* விமான சாகசத்தை மறைத்த கடும் பனிமூட்டம்

குடியரசு தின அணிவகுப்பில் ரபேல், மிக்-29, சுகாய் 30 ரக  போர் விமானங்கள், சி-130 சூப்பர் ஹெர்குலிஸ்,சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் என பல்வேறு விமானங்களை விமானிகள் ஓட்டி சென்று சாகசத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆர்வத்துடன் தாங்கள் வைத்திருந்த போனில் கேமராவை ஆன் செய்தபடி நின்றனர். ஆனால் கடும் பனிமூட்டம், காற்று மாசு ஆகியவற்றால் அந்த காட்சிகளை படம் எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

* எகிப்து படைகள் அணிவகுப்பு

எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிலையில், அந்த நாட்டு ஆயுதப் படைகளின் 144 பேர் கொண்ட பிரிவும் அணிவகுப்பில் பங்கேற்க அணிவகுப்புக் குழுவுக்கு கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல்பத்தா எல்கரசாவி தலைமை தாங்கினார். இது பற்றி எகிப்து ராணுவம் வெளியிட்ட செய்தியில் ‘‘கிமு 3,200 ஆண்டுகள் பழமையான எகிப்திய ஆயுதப் படையில் நவீன எகிப்திய ராணுவம், முகமது அலி பாஷாவின் ஆட்சியில் அதாவது (1805-1849) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

* 3 அடுக்கு பாதுகாப்பு

குடியரசுத் தினத்தையொட்டி விழா நடந்த கடமைபாதையில் மூன்றடுக்கில் உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் அதனை சுற்றியுள்ள 5கிமீ அளவிற்கு போக்குவரத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை தொடங்கிய விழா பிற்பகல் 12மணிக்கு முடிந்தது. இந்நிலையில் போக்குவரத்து ஒவ்வொரு வழியாக விதிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சிகளை காண வந்த பார்வையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது இல்லம் நோக்கி புறப்பட்டதால் அதிகப்படியான கூட்ட நெரிசல் காணப்பட்டது.

Related Stories: