கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், காடியார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தந்திடவும், திருநாவலூர் வட்டாரத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திடவும், சங்கராபுரம் வட்டத்தில் விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைகளை வழங்கிடவும், புதுப்பாலப்பட்டு கிராமத்தில் வாரச்சந்தை அமைத்து தந்திடவும், மோ.வண்ணஞ்சூர், பூட்டை கிராமத்தில் தடுப்பணை கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாசார் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றிடவும், வரஞ்சரம் முதல் கள்ளக்குறிச்சி வரை செல்வதற்கு காலை நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்திதரவும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குநர் முருகேசன்,

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், வேளாண்மை துணை இயக்கநர் (திட்டம்) சுந்தரம், வேளாண்மை இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை சாந்தி, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, தோட்டக்கலைத்துறை இயக்குநர் அன்பழகன், தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அருட்பெருஞ்ஜோதி மற்றும் அனைத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: