விபத்துக்கு பழி தீர்க்கும் வகையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொன்று ஆற்றில் வீசிய 5 பேர் கைது: மகாராஷ்டிராவில் பயங்கரம்

புனே: புனே அருகில் அமைந்துள்ள பீமா நதிக்கரையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்ததாக உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள யாவாத் கிராமத்தின் அருகில் பாயும் பீமா நதிக்கரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் 7 பேரும் ஒஸ்மானபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மோகன் பவார் (45), அவரின் மனைவி சங்கீதா மோகன் (40), மகள் ராணி புல்வாரே (24), மருமகன் ஷியாம் ஃபுல்வாரே (28), மூன்றிலிருந்து 7 வயது வரையிலான 3 பேரக் குழந்தைகள் என்பது தெரிய வந்தது.

இவர்களின் 7 உடல்களும் 200 முதல் 300 மீட்டர் வரையிலான தொலைவில் கண்டறியப்பட்டதாக போலீசார் கூறினர். மேலும், அவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை முடிவில் தண்ணீரில் மூழ்கியதே உயிரிழப்புக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 7 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ெதாடங்கினர். தொடர் விசாரனையில், இறந்தவர்களின் உறவினர்கள் 5 பேரே திட்டமிட்டு 7 பேரை கொன்றது அம்பலமானது. அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து புனே எஸ்பி அங்கித் கோயல் கூறுகையில், ‘முக்கியக் குற்றவாளியான அசோக் பவாரின் மகன் தனஞ்ஜெயா பவார் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் பலியானார். இந்த விபத்துக்கு மோகன் பவாரின் மகனே காரணம் என்று அசோக் எண்ணினார். தன் மகனின் இறப்புக்கு பழிதீர்க்கும் நோக்கத்தோடு இருந்த அசோக், தனது உறவினர்கள் ஷியாம் பவார், சங்கர் பவார், பிரகாஷ் பவார், கந்தாபாய் சர்ஜீரோ உள்ளிட்டோருடன் இணைந்து 7 பேரையும் கொலை செய்து நதிக்கரையில் வீசியுள்ளனர்’ என்று கூறினார்.

Related Stories: