மேகாலயா பேரவை தேர்தல்: 55 வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டது காங்கிரஸ்

ஷில்லாங்: மேகாலயா சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்களின் பெயரை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேகாலயாவில் பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமை, 55 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தேர்தல் குழு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிக்கையின்படி, மாநில காங்கிரஸ் தலைவரும், ஷில்லாங் நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை எம்பியுமான வின்சென்ட் எச்.பாலா சுதங்கா சைபுங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் சேர்ந்த சலேங் சங்மா, காம்பெக்ரே (எஸ்டி) தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.சங்மா சோங்சாக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில் எட்டு பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களை காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றது. ஆனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள்,  திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆளும் தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: