ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும்: முத்தரசன் பேட்டி

வேலூர்: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொறுப்பாளர்களின் மண்டல கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்தவுடன் திமுக தலைவரும் முதல்வருமான முக.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதித்து அழைத்து பேசி அதனை காங்கிரசுக்கே தந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் கூட்டணி தர்மம் காப்பாற்றப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் இனிமேல் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்து கூறி வாக்குகளை சேகரிப்போம். தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளவை குறித்து நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எடுத்துரைப்போம். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு என்று அறிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பி மீண்டும் அவர் கேட்ட விளக்கங்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது. உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகள் தடுக்கப்படும்.

நெய்வேலி சுரங்கத்திற்கு மீண்டும் நிலங்கள் கையகப்படுத்தும்போது அங்குள்ள விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் கருத்தை கேட்டுதான் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். தமிழக அரசும் இதில் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நாங்கள் கடந்த காலங்களில் போராடினோம். இப்போதும் பழைய ஓய்வூதியம் கொண்டு வர முதல்வரை கேட்டுள்ளோம். நிதி நிலை சீரானால் வழங்குவதாக கூறியுள்ளார். இவ்வாறு கூறினார்.

Related Stories: