மகளிர் பிரிமியர் லீக் டி20; ரூ.4,670 கோடிக்கு 5 அணிகள் ஏலம்.! பிசிசிஐ உற்சாகம்

மும்பை: பிசிசிஐ நடத்த உள்ள மகளிர் பிரிமியர் லீக் டி20 தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான உரிமம், ₹4670 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கான ஐபிஎல் டி20 போட்டியை போன்று, மகளிருக்கான  டபிள்யூ.ஐபிஎல் டி20 போட்டி இந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற உள்ளது. மார்ச் 3 - 26 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த அணிகளை  வாங்குவதற்கான ஏலத்தில்  பங்கேற்க ஜன.3 - 21 வரை விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.

ஒரு விண்ணப்பத்தின் விலை ₹5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை கையாள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தகுதிகளின் அடிப்படையில் 40 நிறுவனங்கள்  விண்ணப்பங்களை வாங்கின.

இதில் ஐபிஎல் அணிகளை வைத்திருக்கும் ஐதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ அணிகளும் அடக்கம். அதானி, ஜேகே சிமென்ட்ஸ்  மற்றும் தமிழகத்தின்  செட்டிநாடு, ராம், நீல்கிரீஸ் என பல குழுமங்கள் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை  சமர்ப்பித்திருந்த நிலையில், 17 நிறுவனங்கள் தான் நேற்று நடந்த ஏலத்தில் பங்கேற்றன. அகமதாபாத் அணியை அதிகபட்சமாக ₹1289 கோடிக்கு  அதானி குழுமம் வாங்கியது. மும்பை அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ₹913 கோடிக்கும், பெங்களூரு அணியை ₹901 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் லிமிட்டட் நிறுவனமும், டெல்லி அணியை ₹810 கோடிக்கு ஜேஎஸ்டபுள்யு நிறுவனம்,  லக்னோ அணியை ₹757 கோடிக்கு  கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்தன. மகளிர் அணிகள் சில நூறு கோடிகளுக்கு ஏலத்தில் போகும் என்று   பிசிசிஐ எதிர்பார்த்திருந்த நிலையில், கிட்டதட்ட ₹5 ஆயிரம்  கோடியை ஏலத் தெ தொகை நெருங்கியுள்ளது.

மகளிர் பிரிமியர் லீக் (டபுள்யுபிஎல்) என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடருக்கான அணிகளின் மொத்த ஏலத்தொகை ₹4,670 கோடி. 2008ல் ஆண்கள் ஐபிஎல் தொடங்கியபோது கூட 8 அணிகள் இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்படவில்லை. அணிகளின் பெயர்களை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் பின்னர் முடிவு செய்யும். ஒவ்வொரு அணிக்கும் வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளை வாங்க தலா ₹12 கோடி செலவிடலாம் (5 வெளிநாட்டு வீராங்கனைகள்). இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், ‘இது மகளிர் கிரிக்கெட்டில்  ஏற்பட்டுள்ள புரட்சியின் தொடக்கத்தை குறிக்கிறது.  மகளிர் கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி விளையாட்டுக்கும் ஒரு மாற்றத்துக்கான பயணமாக இருக்கும். மகளிர் கிரிக்கெட்டில்  தேவையான சீர்திருத்தங்களை இந்தப் போட்டி கொண்டு வரும்’ என்றார்.

Related Stories: