விராலிமலை அருகே மீன்பிடி திருவிழா: 10 கிராம வீடுகளில் கமகமத்த மீன் குழம்பு

விராலிமலை: விராலிமலை மேலபச்சகுடி பெரியகுளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மேலபச்சகுடி கிராமத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அதிகாலையிலேயே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பெரியகுளம் கரையில் திரண்டனர்.

காலை 6.40 மணியளவில் ஊர் முக்கியஸ்தர் ராமசாமி வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தார். இதையடுத்து குளக்கரையில் காத்திருந்த மக்கள் குளத்திற்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் கொண்டு போட்டிபோட்டு  மீன்களை பிடித்தனர். குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கின. பிடித்த மீன்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு சென்றனர். மேலபச்சக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் இன்று கமகமக்கும் மீன்குழம்பு வாசம் கமகமத்தது.

Related Stories: