கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு; கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர், மகன் மீட்பு: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நேற்று மாலை அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் ஒரு மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் கடத்தி சென்றது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் நேற்று நள்ளிரவு மீட்டு போலீசார் தீவிரமாக விசாரித்ததில் பல்வேறு திடுக் தகவல்கள் தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாதர்பாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (46). இவர், பல்லவாடா ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அதிமுகவின் அம்மா பேரவை இணை செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ரோஜா ரமேஷ்குமார் (44), என்பவர் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 1வது ஒன்றிய அதிமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

இவர்களுக்கு ஜாய் (24), ஜேக்கப் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இத்தம்பதி மணல் உள்பட பல்வேறு தொழில்கள் நடத்தி வந்ததால், பல்வேறு தரப்பினரிடையே தொழில் போட்டியும் முன்விரோத தகராறு சம்பவங்களும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்த பெண் கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது 2வது மகன் ஜேக்கப் ஆகிய இருவரையும் மிரட்டி, வீட்டின் முன்பு நின்றிருந்த ஒரு சொகுசு காரில் 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுவிட்டனர். மேலும், வீட்டில் இருந்த சிசிடிவி காமிரா மற்றும் பதிவு கருவிகளையும் மர்ம கும்பல் உடைத்துவிட்டு தப்பி சென்றது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தியிடம் கவுன்சிலர் ரோஜாவின் கணவர் ரமேஷ்குமார், அவரது தம்பி டேவிட் சுதாகர் ஆகியோர் நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் மற்றும் டிஎஸ்பி கிரியாசக்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரித்தனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் கவுன்சிலர் ரோஜா, அவரது மகன் ஜேக்கப் ஆகிய இருவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இருவரும் கடத்தி செல்லப்பட்ட கார் ஆரம்பாக்கம் வழியே ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்றதாகவும் அந்தந்த பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநில எல்லையில் உள்ள பரதபாளையம் பகுதியில் ஜேக்கப்பின் செல்போன் சுவிட்ச் ஆப் நிலையில் போலீசார் மீட்டனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஆந்திர எல்லையில் உள்ள சத்தியவேடு பகுதியில் கவுன்சிலர் ரோஜாவின் செல்போன் ஆன் பண்ணப்பட்டதும், அதன் சிக்னலை வைத்து, அங்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்பகுதியில் கவுன்சிலர் ரோஜாவும் அவரது மகன் ஜேக்கப்பும் நின்றிருப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். 10 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பின்புறச் சுவர் வழியே உள்ளே குதித்து, எங்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டினர். மர்ம கும்பலில் சிறுவன் ஜேக்கப்பின் கால்களுக்கு நடுவே துப்பாக்கியால் சுட்டதாகவும், அது வெடிக்காததால் வெளியே சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இவர்களை காரில் கடத்தி சென்றபோது நடுவழியில் மர்ம கும்பல் டீ குடிக்க இறங்கியதாகவும், அவர்களில் ஒருவர், பெண் கவுன்சிலர் மற்றும் அவரது  மகனை தப்பி செல்லும்படி கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: