விமான நிலைய பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை ஈடுபடுத்த கோரி வழக்கு

மதுரை: விமான நிலைய பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தவர்களை ஈடுபடுத்தக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களாக உள்ளனர்.

இதோடு விமான நிலைய அறிவிப்பு பலகைகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. எந்த சந்தேகம் என்றாலும் பாதுகாப்பு வீரர்களிடம் தான் கேட்க வேண்டியுள்ளது. நடிகர் சித்தார்த் சமீபத்தில் மதுரை விமான நிலையம் வந்திருந்தார். சோதனையின்போது ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால், வீரர்களுக்கு இந்தி மட்டுமே தெரிந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரை மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றுள்ளார். இதேபோன்ற அனுபவம் கனிமொழி எம்பிக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் உள்ள மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், பாதுகாப்பு பணியில் தமிழ் தெரிந்தோரை ஈடுபடுத்தவும், அவர்கள் பயணிகளிடம் பொறுமையாகவும், பணிவுடனும் நடந்து கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர், மனுதாரர் தரப்பில் போதுமான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: