பஞ்சாபி பாடகர் பாடிக் கொண்டிருந்த போது மேடையேறி நிகழ்ச்சியை ரத்து செய்த போலீஸ் ஏசிபி: மோடி தொகுதியில் பரபரப்பு

வாரணாசி: வாரணாசியில் பஞ்சாபி பாடகர் மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென மேடையேறி நிகழ்ச்சியை போலீஸ் அதிகாரி ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடந்த கலாசார விழாவில், பஞ்சாபி பாடகர் ராப்தார் என்பவர் மேடையில் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மக்களும் ஒரே நேரத்தில் கூடியதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் மக்கள் போலீஸ் தடுப்புகளை உடைத்து, விழா நடக்கும் இடத்தை நோக்கி முன்னேறி சென்றனர்.

அதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏசிபி பிரவீன் சிங், திடீரென மேடையில் ஏறினார். அப்போது அவர் கூறுகையில், ‘கலாசார நிகழ்ச்சிக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்கிறேன். மேடையை நோக்கி மக்கள் வரவேண்டாம். அவரவர் வந்த வழியை நோக்கி திரும்பி செல்லவும்’ என்று அறிவுறுத்தினார். அந்த நேரத்தில் பாடகர் ராப்தாரும் மேடையில் இருந்தார். அதன்பின் சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்து சென்றது. கலாசார நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது. ஏ.சி.பி பிரவீனின் இந்த செயலை, பாடகர் ரப்தார் பாராட்டியுள்ளார். அதில், ‘விபத்து ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சியை ரத்து செய்தற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: