சித்தூர் காந்தி சிலை அருகே சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பா.ஜனதா கட்சியினர் மரியாதை

சித்தூர் :  சித்தூர் காந்தி சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியினர் அவருடைய உருவ படத்திற்கு மாலை அணிவித்து கேக்கு வெட்டி கொண்டாடினார்கள்.சித்தூரில் நேற்று பாரதீய ஜனதா கட்சியினர் காந்தி சிலை அருகே சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். சித்தூர் மாவட்ட  பா.ஜ. கட்சியினர் மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.பின்னர் அவர் பேசியதாவது:

 மகாத்மா காந்தி அவர்கள் அகிம்சை முறையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டார் ஆனால் சுபாஷ் சந்திரபோஸ்  மாணவர்களை ஒரு படையாக அமைத்து நீங்கள் உயிரை கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் பெற்று தருகிறேன் என பேசி இளைஞர்களை இந்திய சுதந்திரத்திற்காக ஒரு படையை திரட்டியவர்.

 சுபாஷ் சந்திரபோஸ் 1898-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி மேற்குவங்கம் மாநிலத்தில் கொல்கத்தா மாகாணத்தில் பிறந்தார். அவர் சிறுவயதிலேயே படிப்பின் மீது அதிக அக்கறை கொண்டு பட்டப் படிப்பு முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பின்போது மாணவர்கள் அணி தலைவராகவும் பதவி ஏற்றார். ஆங்கிலேயர் ஆட்சி அவருக்கு உயர் பதவி வழங்கி வேலைவாய்ப்பு வழங்கியது.

ஆனால் அவர் ஆங்கிலேயர்களுக்கு அடிப்பணிந்து நான் பணிபுரிய மாட்டேன் என பணியை ராஜினாமா செய்து இந்திய நாட்டு சுதந்திரத்திற்காக போராடினார். அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளை பாரதீய ஜனதா கட்சியினர் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து ஒரு படையை அமைத்து போராடியபோது சுபாஷ் சந்திரபோசை சிறையில் அடைத்தார்கள். ஆங்கிலேயர்களின் கண்ணில் மண்ணைத் தூவி சிறையில் இருந்து தப்பி வந்து மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாமனிதர் யார் என்றால் சுபாஷ் சந்திரபோஸ்.

 இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக ஜப்பான் நாட்டு அரசு அறிவித்தது. ஆனால் இந்திய நாட்டு மக்கள் அவர் உயிரோடு இருப்பதாக நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அந்த மாமனிதர் பிறந்த நாளை சித்தூர் மாநகரத்தில் கொண்டாடுவது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.   இதில் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் தோட்டப்பாளையம் வெங்கடேஷ், வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெயக்குமார், நகர தலைவர் ராம் பத்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: