குன்னூர் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி :  குன்னூர்  அருகே லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் காட்சி முனைக்கு செல்லும் சுற்றுலா  பயணிகள் அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்குள் நின்று புகைப்படம் எடுத்து  மகிழ்கின்றனர்.மலை மாவட்டமான நீலகிரி சுற்றுலா தலங்கள் நிறைந்த  மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவ கூடிய இதமான காலநிலையை அனுபவிக்க  வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா  பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வர கூடிய சுற்றுலா பயணிகள் ஊட்டி,  குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா  தலங்களுக்கு சென்று பார்வையிட்டு மகிழ்கின்றனர்.

கொரோனா காலகட்டத்தில்  சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்து சுற்றுலா தொழில் பாதிப்படைந்திருந்தது.  தற்போது தொற்று பாதிப்பு குறைந்து கடந்த ஓராண்டாக நீலகிரிக்கு வர கூடிய  சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்  தற்போது பருவமழை முடிந்து உறைபனி பொழிவுடன் குளு குளு காலநிலை நிலவி  வரும் நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  நகரில்  உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வது மட்டுமின்றி தொட்டபெட்டா, கொடநாடு,  குன்னூர் லேம்ஸ் ராக் , டால்பின் நோஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று  வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இதமான காலநிலை நிலவிய நிலையில் ஏராளமான  சுற்றுலா பயணிகள் குன்னூர் அருகேயுள்ள லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ்  காட்சிமுனைக்கு படையெடுத்தனர். செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகளை  பார்த்து ரசித்ததுடன், அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்குள் நின்று புகைப்படம்  எடுத்து மகிழ்ந்தனர். மேலும் காட்சிமுனைகளில் இருந்து பவானிசாகர் அணையின்  எழில்மிகு காட்சிகளை பார்த்து ரசித்தனர்.

Related Stories: