135 பேரை பலி கொண்ட மோர்பி பால விபத்தில் அஜந்தா எம்டிக்கு வாரண்ட்

மோர்பி: குஜராத்தில் 135 பேரை பலி கொண்ட மோர்பி பால விபத்து வழக்கில் அஜந்தா நிறுவன எம்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆங்கிலேயர் காலத்து தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட அஜந்தா குழுமம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மோர்பி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்ஜே கான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலம் இடிந்தது தொடர்பான வழக்கில் அஜந்தா குழும நிர்வாக இயக்குனர் ஜெயசுக் பட்டேலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது மோர்பி பால விபத்து தொடர்பாக எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் ஜன.20ல் அவர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு பிப்.1ல் விசாரிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் நீதிபதி கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: