ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதிரிகள் ஒருவர் கூட இல்லை: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஒரு எதிரி கூட கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திமுக கூட்டணி கட்சியினா காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின்போது, மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, மாநிலத்துணை தலைவர் கோபண்ணா, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ, விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, நிருபர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றியானது, இது பெரியார் மண் தான் என்ற சான்றாக அமையும். இங்கு சனாதன சக்திக்கு இடமில்லை. அவர்களை விரட்டியடிக்கும் வாய்ப்பை இந்த தேர்தல் தந்திருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை பாஜ தோள்களில் ஏறி நிற்கக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜவை வளர்த்துவிடும் அனைத்து வேலைகளையும் அதிமுக செய்து வருகிறது.

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்ணுக்கு எட்டிய தொலைவில் கூட எதிரிகள் இல்லை. அதிமுக எத்தனை வேட்பாளர்களை போட்டாலும் அவர்கள் டெபாசிட் வாங்குவார்களா என்ற கேள்வி தான் எழுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த இந்திய அளவில் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சியின் அடித்தளமாக அமையும். ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் அச்சாரமாக இந்த தேர்தல் அமையும் என நம்புகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தீவிரமாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: