ஒரே மாதத்தில் 3வது முறை ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் மீது தாக்குதல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரே மாதத்தில் 3வது முறையாகும். ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்தியர்கள்  வசித்து வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில்கள் மீது தற்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஜன.12ல் முதன்முறையாக மெல்போர்ன் சுவாமிநாராயணன் கோயில் மீது காலிஸ்தான்  ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இந்தியாவிற்கு எதிரான வாசகங்களை எழுதிச்சென்றனர். 2வது தாக்குதல் ஜனவரி 16ம் தேதி நடந்தது.

விக்டோரியா பகுதியில் கேரம் டவுண்ஸ் என்ற இடத்தில்  சிவா விஷ்ணு கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழ் மக்களின் கோயில் ஆகும். இதுபற்றி அறிந்ததும் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசு ஆஸ்திரேலியா அரசை அறிவுறுத்தியது. தற்போது ஒரே மாதத்தில் 3வது முறையாக மெல்போர்ன் ஆல்பர்ட் பார்க் பகுதியில் அமைந்து இருக்கும் ஹரே கிருஷ்ணா கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்கான் கோயில் என்று அறியப்படும் இந்த கோயிலில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் தான் இந்த கோயிலிலும் தாக்குதல் நடத்தி உள்ளனர். கோயில் பின்புறம் உள்ள சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் எழுதிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக விக்டோரியா மாகாண போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்தியர்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவில் தொடா்ந்து இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் இந்தியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விக்டோரியா மாகாணத்தின் நிர்வாக பொறுப்பில் உள்ள ஜெசிந்தா ஆலன் கண்டித்துள்ளார். லிபரல் கட்சி எம்பி பிராட் பேட் கூறுகையில்,’இது அருவருப்பானது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது’என்றார்.  

இஸ்கான் கோவிலின் ஐடி ஆலோசகரும், பக்தருமான ஷிவேஷ் பாண்டே கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரங்களாக,   இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு நிறைந்த தாக்குதலை நடத்துபவர்கள் மீது விக்டோரியா காவல்துறை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.

Related Stories: