குமரியில் கிராம்பு அறுவடை தீவிரம்: கிலோ ரூ900 வரை விற்பனையாகிறது

அருமனை: குமரி மாவட்டத்தில் பத்துகாணி உள்ளிட்ட மலையோர பகுதிகளில் கிராம்பு அறுவடை தொடங்கியுள்ளது. குமரி மாவட்டம் பத்துகாணி, நிரப்பு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கிராம்பு மற்றும் நல்ல மிளகு விவசாயம் நடைபெறுகிறது. தற்போது கிராம்பு அறுவடை சீசன் ஆகும். இந்த ஆண்டு தட்பவெட்ப நிலைகள் சரியாக இருக்கின்ற காரணத்தினால் மகசூல் அதிகமாக கிடைத்திருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ கிராம்பு ஆனது தற்போது ரூ.900 வரை விற்பனையாகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மொட்டுவிட்டு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, போன்ற குளிர்காலத்தில் கிராம்பானது முதிர்ச்சி அடைகிறது.

முதிர்ச்சி அடைந்த கிராம்பை பறிப்பதற்காக மரத்தில் ஏறும் தொழிலாளிகளுக்கு தினம் கூலியாக ரூ.500ம், பறித்த கிராம்பை தண்டிலிருந்து பிரித்தெடுக்கும் நபர்களுக்கு கிலோவுக்கு ரூ.10ம் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் தினசரி 10, 12 கிலோ வரைக்கும் பிரித்தெடுக்கிறார்கள். நீர்ப்பரப்பு பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய மலைப்பகுதிகளில் கிராம்பு அதிகமாக விளைச்சல் கொடுக்கும் தன்மை வாய்ந்தது இருப்பினும் பத்துகாணி பகுதியில் சொட்டு நீர்ப்பாசன முறையை பின்பற்றுகிறார்கள். இதன் மூலம் இன்னும் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

மகசூல் மேலும் அதிகரிக்க இயற்கை உரம் அதாவது கோழிகள் அங்கு வளர்க்கப்பட்டு அதனுடைய கழிவுகளை இந்த கிராம்பு மரத்திற்கு உரமாக பயன்படுத்துகிறார்கள். மூன்று கிலோ கிராம்பானது உலர்த்தும் போது 1 கிலோ கிடைக்கும். அதாவது ஒரு டன் பச்சை கிராம்பு உலர்த்தும் போது 333 கிலோ மட்டும் கிடைக்கும் என்கின்றனர். இதே முறைதான் நல்ல மிளகு விவசாயத்திற்கும் உள்ளது.

அதே வேளையில் கிராம்பை பொறுத்தமட்டில் அறுவடை தருணம் மாறிய பின் இலையுதிரும் ஒரு பருவம் இருக்கிறது. அப்போது கிராம்பின் மரத்திலிருந்து உலரக்கூடிய இலையானது, ஒரு டன்னுக்கு ரூ.40 ஆயிரம் வரை விலை கிடைக்கிறது உணவிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தும் கிராம்பானது நம் நாட்டில் விளைந்தாலும் இதனுடைய மகத்துவம் வெளிநாட்டவர் அதிகம் அறிந்து அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

Related Stories: