குமரியில் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் துவக்கம்

களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பணப் பயிராக விளங்கும் ரப்பர் மரங்களில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளன. மேற்கு மாவட்டத்தில் ரப்பர் மரங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை ரப்பர் மரங்களே சூழ்ந்து உள்ளன. வீட்டைச்சுற்றி 10 மரங்கள் நின்றால் கூட, தினசரி வருமானமாக கிடைத்துவிடும் என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக ரப்பர் விலை படிப்படியாக வீழ்ச்சியை சந்தித்தது.

ஆனால் கடந்த ஒரு வாரமாக உலக மார்க்கெட்டில் ரப்பர் விலை சற்று உயர்ந்து வருகிறது. ஆகவே ரப்பர் விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர். வழக்கமாக பிப்ரவரி மாதம் இலையுதிர் காலம் தொடங்கும். மார்கழி, தை மாதங்களில் அதிக அளவில் குளிர் காணப்படுவது உண்டு.  தை மாதம் முடிந்தவுடன் கடும் வெயில் சீசன் தொடங்கும். அப்போது இலையுதிர் காலம் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சில நாட்களுக்கு முன்னதாக இலையுதிர் காலம் தொடங்கி உள்ளது. தினமும் அதிகாலை நல்ல குளிர் நிலவுவதால், ரப்பர் மரங்களில் பால் உற்பத்தி அதிகரித்து உள்ளது.

ஆனால் இந்த மாதமே இலையுதிர் காலம் தொடங்கி உள்ளதால்,  பால்வெட்டு நிறுத்த வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இலையுதிர் காலம் தொடங்கிய பிறகு, 2 மாதங்கள் தொழிலாளிகளுக்கு பால்வெட்டு தொழில் நடப்பதில்லை. அந்த காலகட்டத்தில் பால்வெட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மாற்று வேலைகளுக்கு செல்வர். வழக்கமாக பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் வரும் இலையுதிர் காலம் தற்போது முன்கூட்டியே தொடங்கி உள்ளது ரப்பர் தொழிலாளர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: