மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கையால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்று எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் (எஸ்.டி.டி.யூ.) தொழிற்சங்கத்தின் தேசிய கமிட்டி கூட்டம் சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் அப்துல் அஜீஸ் கான் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் முகமது பாரூக் வரவேற்புரையாற்றினார். தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் செவ்விளம்பரிதி, தேசிய செயலாளர் நவ்ஷாத் மங்களாச்சேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் தேசிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்கால தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்தும், சங்கத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மோடி அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார நடவடிக்கையின் காரணமாக, 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு தனது தவறான பொருளாதார கொள்கையை உடனே மாற்றி அமைத்து புதிய வேலை வாய்ப்புகளை நாடுமுழுவதும் பரவலாக உருவாக்கி தர வேண்டும்.

ஒன்றிய அரசு எல்லா மாநகரங்களிலும் நகரங்களிலும் சாலையோர வியாபாரிகளுக்கான கமிட்டிகளை அமைத்து உரிய முறையில் தேர்தல் நடத்தி, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சிறு-குறு தொழில் முனைவோருக்கு இலகுவான முறையில் மானியத்துடன் கூடிய வட்டி இல்லா கடன் திட்டத்தை வழங்க வேண்டும். ’’உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: