என்னுடைய விமான நிலையத்தில் என்னையே அனுமதிக்க மறுப்பதா? சென்னை விமான நிலையத்திற்கு மிரட்டல் கடிதம்: கள்ளக்குறிச்சி ஆசாமிக்கு வலை

சென்னை: ‘என்னுடைய விமான நிலையத்தில் என்னையே அனுமதிக்க மறுப்பதா’ என கேட்டு, விமான நிலைய மேலாளருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை விமான நிலைய மேலாளருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன், தபாலில் ஒரு கடிதம் வந்தது. தமிழில் எழுதியிருந்த அந்த கடிதத்தை விமான நிலைய மேலாளர் பிரித்து படித்ததும் கடும் அதிர்ச்சியடைந்தார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் ரெட்டியார் எழுதுகிறேன், என துவங்கிய அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எனக்கு சொந்தமான நாடு. இந்நாட்டில் நான் எங்கு செல்வதற்கும் உரிமை உண்டு.

ஆனால், நான் சென்னை விமான நிலையத்துக்கு வந்தால், என்னை விமான நிலைய உள்பகுதிக்குள் அனுமதிக்காமல், காவலர்கள் மூலம் வெளியே நிறுத்தி விடுகின்றனர். இது என்னுடைய விமான நிலையம். அப்படி இருக்கையில், என்னை ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள். நான் விரைவில் மீண்டும் சென்னை வருவேன். அப்போது உள்ளே அனுமதிக்க வேண்டும். தடுத்து நிறுத்தினால், மோசமான பின்விளைவுகளை சந்திக்கநேரிடும். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், என்னை யாரும் தடுத்து நிறுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

முகவரியுடன் அவரது செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை விமான நிலைய இயக்குநருக்கு மேலாளர் அனுப்பி வைத்தார்.

பின்னர் விமான நிலைய காவல் நிலையத்துக்கு இணையதள முகவரி மூலமாக விமானநிலைய இயக்குநர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அக்கடிதத்தில் இருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதற்கு அவர், ‘நீங்கள் யார், எதற்காக எனக்கு போன் செய்கிறீர்கள்’ என அந்த நபர் கூறியிருக்கிறார். போலீஸ் என கூறியதும், ‘எதற்காக போன் செய்கிறீர்கள். முன்னதாகவே தெரிவிக்காமல், இப்படி திடீரென போன் செய்தால் எப்படி’ என மறுமுனையில் அந்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு போலீசார், ‘உங்களிடம் விசாரிக்க வேண்டும்.

நீங்கள் சென்னை விமானநிலைய காவல் நிலையத்துக்கு வாருங்கள்’ என்றனர். அதற்கு, ‘நான் வரமாட்டேன். நீங்கள் வேண்டுமானால் கள்ளக்குறிச்சிக்கு வந்து என்னிடம் விசாரியுங்கள்,’ என கூறிவிட்டு அந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார். அதன்பிறகு அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் போலீசார் குழப்பமடைந்தனர். இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, கண்ணன் என்பவர் அப்பகுதியில் வசிக்கிறாரா என விசாரிக்கும்படி கூறியுள்ளனர். அப்படி யாரேனும் இருந்தால், அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: