ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக ஜி.கே.வாசன் எம்.பி.யுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்திப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்தித்து பேசியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளன. இதனால் இரட்டை இலை சின்னம் இபிஎஸ்க்கு கிடைக்குமா அல்லது ஓபிஎஸ்சுக்கு மட்டும் சின்னம் கிடைக்குமா என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், தலைமையில் அதிமுங்க இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்; J.C.D. பிரபாகர், P.H. மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசனை அவரது இல்லத்தில் இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக சந்திக்க இருக்கின்றனர். பின்னர், இன்று மாலை 4-00 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் சந்திக்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெ. ஜான் பாண்டியனையும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் M. ஜெகன் மூர்த்தியையும் சந்திக்க இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி சந்தித்து பேசியது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தர ஜி.கே.வாசனிடம் கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: