இயற்கையின் அருட்கொடை

நன்றி குங்குமம் டாக்டர்

தற்போதைய வெயில் காலத்தில் பரவலாகக் கிடைக்கும் பழங்களில் முலாம்பழமும் ஒன்று. மனிதர்களின் வெப்பத்தை தணிக்க இயற்கையே வழங்கிய அருட்கொடையான முலாம்பழம் உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைக்க பெரிதும் உதவுகிறது. அத்துடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் தன்னுள் கொண்டது முலாம்பழம். அதையும் தெரிந்துகொள்வோம்...

*பலவிதமான மருத்துவ குணங்களை உடைய முலாம்பழத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகளும் முலாம்பழத்தினை உண்ணலாம். கெட்ட கொழுப்பும் இதில் இல்லை.

*அதிக எனர்ஜியைத் தரும் பழம் இது. கோடையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புக்கு ஈடு கொடுத்து சக்தியை கொடுப்பதில் முலாம்பழம் மிகச்சிறந்ததாக இருக்கிறது.

*வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மையும் இதற்கு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் சான்று அளிக்கின்றனர்.

*முலாம்பழத்திலுள்ள Adenosine என்ற வேதிப்பொருள் ரத்த செல்கள் கட்டியாக மாறுவதைத் தடுக்கிறது. இதனால் இதய நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாத்து நீண்ட ஆயுளைத் தரவும் இக்கனி வாழ வழி செய்கிறது.

*பலா, மாம்பழம், வாழை என மற்ற கனிகளில் இருப்பதைவிட, முலாம்பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆகவே, அளவுக்கு அதிகமான உடல் எடையால் அவதிப்பட்டு வருபவர்கள் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

*முலாம்பழத் துண்டுகளை, 3 கப்புக்கும் மேலாக ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், பார்வை இழப்பை உண்டாக்குகிற Macular degeneration முதுமைப்பருவத்தில் வராது என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

*முலாம்பழமானது மூளைக்குத் தேவையான ஆக்சிஜனைத் தொடர்ந்து அனுப்பி, அந்த உறுப்பு சோர்வடையாமலும் பார்த்துக் கொள்கிறது.

*வைட்டமின் ஏ முலாம்பழத்தில் பீட்டா கரோட்டின் வடிவத்தில் காணப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதில் காணப்படுகிற வைட்டமின்-பி உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.

*முலாம்பழத்துடன் இஞ்சி சாறு, சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டு வர, நாள்பட்ட குடல்நோய் மற்றும் வயிற்றுப்பொருமல் ஆகியவை குணமாகும்.

*வைட்டமின்-சி எனும் ஆன்டி ஆக்சிடன்ட் இதில் ஏராளமாக உள்ளது. எனவே, இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.

Related Stories: