நச்சு இல்லாத உரம், நச்சுனு விளைச்சல்; மீன் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை: விராலிமலை பெண் விவசாயி அசத்தல்

விராலிமலை: மீன் கழிவுகளை கொண்டு இயற்கையான முறையில் உரம் தயாரித்து அதை வயல்களுக்கு தெளிப்பதன் மூலம் தழைச்சத்து சரியான அளவில், சரியான முறையில் கிடைப்பதாகவும். இந்த முறையை கடந்த இரண்டு வருடமாக தன் வயலுக்கு பயன்படுத்தி முறையான மகசூல் ஈட்டி வருவதாக ஐந்தாம் வகுப்பு படித்த கிராமத்து பெண் விவசாயி கூறுகிறார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கல்குடி ஊராட்சி கொடியங்காட்டுபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி லட்சுமி(43).

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்த பெண் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்களை விவாசாயிகள் தவிர்க்க வேண்டும் என்று கூறியதோடு, இயற்கை வேளாண்மை முறையில் அவர் செய்து வரும் விவசாயத்தையும் அதனால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் பற்றியும் கூறியதாவது: எனக்கு திருமணமாகி லோகேஷ், சுகன்யா, ஆனந்த பிரவீன் என 2 மகன் ஒரு மகள். அதில் லோகேஷ் பொறியியல் (கட்டிடகலை) கல்வி படித்து விட்டு அருகில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இருந்த போதும் விவசாயத்தின் மீதே அதிகம் நாட்டம், சுகன்யா டிப்ளமோ கணிணி அறிவியல் முடித்து விட்டு வீட்டில் விவசாய பணிக்கு துணையாக உள்ளார்.

எங்களுக்கு என்று சொந்தமாக சுமார் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு கடந்த 2 வருடத்திற்கு முன் உணவு பொருளில் கலக்கப்படும் கலப்படம், விளை பொருள் உற்பத்தி செய்யும் போதே அதற்கு தெளிக்கப்படும் உரங்களால் ஏற்படும் விஷத்தன்மை குறித்து தொலைக்காட்சி மற்றும் அன்றாட செய்திதாள் மூலம் தெரித்து கொண்டேன். இந்த உணவுகளை உட்கொண்டதால் தான் குழந்தைகள், சிறுவர்களுக்கு உடல் நல கோளாறு ஏற்படுவதாக உணர்ந்தேன். மேலும் அந்த நேரத்தில் உரத்தட்டுப்பாடு வேறு நிலவியது. இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்று மாற்றுவழியை யோசித்தபோது தான் பழங்கால வேளாண்மை முறை நினைவுக்கு வந்தது.

அப்போதெல்லாம் வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வந்த மரம், செடி கொடிகளுக்கு எந்தவித ரசாயன உரங்கள் கலந்து தெளிக்கவில்லை. இருப்பினும் விளைச்சல் அமோகமாக தான் இருந்தது அதுபோல செய்த விவசாயத்தை ஏன் நாம் மீண்டும் முயற்சித்து பார்க்க கூடாது என்று தோன்றியது. இதுகுறித்து கணவர் ஆறுமுகம் மற்றும் மகன் லோகேஷ் இருவரிடமும் கூறினேன், அவர்கள் அதற்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். தொடர்ந்து இயற்கை விவசாய முறை குறித்து அறிந்து கொள்ள மூத்த விவசாயிகளிடம் கலந்தாலோசித்தேன் அதோடு லோகேஷ் யூ டியூப் மூலம் பல இயற்கை முறை விவசாய வீடியோக்களை பார்த்து எனக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

முடிவில் மீன் கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் திரவம் வேளாண் விளை பொருட்களுக்கு உற்ற நண்பன் என்று தெரியவந்தது. மீன் கழிவுகளான குடல், தலை, தோல்கள் உள்ளிட்ட மீன்களின் தேவையற்ற பகுதியை 5 கிலோ எடுத்து கொண்டு 3 கிலோ வெல்லம், அரை கிலோ வாழைப்பழம் அந்த மீன் கழிவில் கலந்து நன்றாக பிசைந்து அதை நொதித்து காற்று புகாத பிளாஸ்டிக் பேரலில் அடைத்து 21 நாட்களுக்கு பின், அந்த கழிவுகளை இயற்கை உரமாக மாற்றலாம். நாம் எடுத்துக்கொள்ளும் மீன் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப சேர்க்கும் பொருளை கூட்டி குறைத்து கொள்ளலாம். மீன் கழிவுகளில் நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

மீன் உரங்களை வயல்களில் இடுவதன் மூலம், மண்ணில் நல்ல நுண்ணுயிரிகளை அதிகரிக்கலாம், இதனால் மண் ஆரோக்கியமாகும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கும். இதனால் பயிர்கள் வலுவான வேர்களை உற்பத்தி செய்து பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கிறது மற்றும் அதிக மகசூலை அளிக்கிறது. மீன் உரம் பயிர் தரத்தையும் மேம்படுத்துகிறது. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நச்சு கலக்காத நன்மை பயக்கும் உணவை நாம் உண்ணுகிறோம் என்ற முழுமன திருப்தி இதனால் ஏற்படுகிறது என்று பெண் விவசாயி லட்சுமி.

Related Stories: