இடம் தேர்வாகியும் கிடப்பில் போடப்பட்டது; நீடாமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

நீடாமங்கலம்: நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நீடாமங்கலம். இந்த வழியாக சென்னை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மார்க்க பேருந்துகளும், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், கோவை, கேரளா உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் நீடாமங்கலம் வழியாக பெரும்பாலும் செல்கிறது. நீடாமங்கலம் 15 வார்டுகளை கொண்ட முதல் நிலை பேரூராட்சியாகவும் உள்ளது.

நவகிரக கோயில்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் நீடாமங்கலம் வந்துதான் செல்கின்றனர். இவ்வாறு இருந்தும் நீடாமங்கலத்தில் நின்று செல்ல பேருந்து நிலையம் இல்லை. நீடாமங்கலத்திலிருந்து திருவாரூர் சாலையில் 10 கிலோ மீட்டரில் கொரடாச்சேரியில் ஒரு பேருந்து நிலையமும்,தஞ்சாவூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் அம்மாப்பேட்டையிலும் பேருந்துகள் நின்று செல்ல பேருந்து நிலையம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு அப்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ராஜமாணிக்கம் நீடாமங்கலம் உழவர் சந்தை எதிரே தஞ்சை சத்திரத்திற்கு சொந்தமான ஒரு இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் கொண்டு வர கடுமையான முயற்சி மேற்கொண்டார். அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் இருந்தவர்கள் அந்த பணியை அப்படியே கிடப்பி போட்டனர். அதன் பிறகு வந்த அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

எனவே தற்போதுள்ள திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை எதிரே புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: