நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

ஊட்டி: நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அதிக வெப்பத்தால் செயலிழந்தன என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1619 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட்கள், கட்டுபாட்டு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிட வசதியாக வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிவி திரையில் நேற்று முன்தினம் மாலை சிசிடிவி கேமரா பதிவுகள் ஒளிபரப்பாகவில்லை. இதனால் பரபரப்பான சூழல் உருவான நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருணா நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து 20 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலர் அருணா நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீலகிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 173 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை. ஏனென்றால் முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பில் உள்ளனர்.

அவர்களை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்குள் யாரும் செல்ல முடியாது. எனவே எந்த விதிமீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. 6.17 முதல் 6.43 வரை 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் சரி செய்யப்பட்டு சீராக இயங்கி வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

The post நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: