ஆதித்யா பிர்லாவின் கிளை உரிமம் வாங்கி தருவதாக ரூ.2.82 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது

சென்னை: ஆதித்யா பிர்லாவின் கிளை உரிமம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.82 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், சென்னை முகப்பேரில் வசிப்பவர் பிரதிக் (32). இவர், தனக்கு மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தில் உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலம் அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான லூயி பிலிப், ஆலென்சோலி, வேன்ஹுசைன் போன்ற கடைகளுக்கான கிளை நடத்த உரிமம் வாங்கித் தருகிறேன் என்று கூறினார். இதை நம்பி கடந்த 2019ம் ஆண்டு பல்வேறு தவணைகளில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். அதை தொடர்ந்து ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் லோகோ, சீல், துணை தலைவரின் கையெழுத்துடன் கூடிய உரிமத்தை தயார் செய்து ெகாடுத்தார். ஆனால், அவர் போலியான உரிமம் கொடுத்தார் என்பதை கண்டுபிடித்து விட்டேன். இதனால், அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டேன்.

ஆனால் அவர் பணத்தை திரும்பித் தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பிரதிக் ஏமாற்றியது உண்மை என்று தெரியவந்தது. அதை தொடர்ந்து பிரதிக்கை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், இதுபோல மேலும் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இது குறித்து மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: