பட்டிவீரன்பட்டி அருகே கருப்பண்ணசாமி கோயில் திருவிழா: ஆயிரக்கணக்கான அரிவாள்கள் காணிக்கை

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. 600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் தை மாத திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறினால், அரிவாள்களை காணிக்கையாக தருவது வழக்கம். சிலர் தங்க அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். சுமார் 2 அடி முதல் 20 அடி வரை அரிவாள்கள் மணியுடன் செய்யப்படும். அரிவாள்களில் கருப்பண்ண சாமியின் உருவம் பொறித்து, காணிக்கையாக செலுத்துபவர்களின் பெயர்கள் எழுதப்படுகின்றன.

இந்த அரிவாள்கள்  செய்வதற்காக முறையாக விரதமிருந்து மார்கழி 1ம் தேதி ஆரம்பித்து தை 2ம் தேதி திருவிழாவிற்கு முந்தைய நாள் பணிகளை முடிவடைகின்றன. அதன்பின்பு தை 3ம் தேதியான நேற்று, அரிவாள்களுக்கு வீட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்பு ஆயிரக்கணக்கான அரிவாள்கள், கோயில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் பக்தர்கள் மேளதாளம், வாண வேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து  செல்லப்பட்டன. சிறப்பு பூஜைகளுக்கு பின்பு அரிவாள்கள் கோட்டை கருப்பண்ணசாமி கோயிலில் செலுத்தப்பட்டன. இத்திருவிழாவில் வெளிமாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: