இலங்கையுடன் 3வது ஒருநாள் 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா சாதனை வெற்றி: ஒயிட்வாஷ் செய்து அசத்தல்

திருவனந்தபுரம்: இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 317 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் 42, ஷுப்மன் கில் 116 ரன் (97 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் 38, கே.எல்.ராகுல் 7, சூரியகுமார் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். விராத் கோஹ்லி 166 ரன் (110 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்), அக்சர் படேல் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் கசுன் ரஜிதா, லாகிரு குமாரா தலா 2, சமிகா கருணரத்னே 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 391 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 22 ஓவரில் வெறும் 73 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (உதிரி 10). நுவனிடு பெர்னாண்டோ 19, கேப்டன் தசுன் ஷனகா 11, கசுன் ரஜிதா 13* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 10 ஓவரில் 1 மெய்டன் உள்பட 32 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார்.  ஷமி, குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்தது. நியூசிலாந்து அணி 2008ல் 290 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதே முந்தைய சாதனையாகும்.

இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார்.

* சச்சினை முந்தினார் கோஹ்லி

சொந்த மண்ணில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் (20 சதம்) சமநிலை வகித்த கோஹ்லி, இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து 21 சதங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். சச்சின் (20 சதம்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்காவின் ஹாஷிம் அம்லா (14 சதம்) 3வது இடத்தில் உள்ளார்.

* ஒருநாள் போட்டிகளில் தனது 46வது சதத்தை பதிவு செய்துள்ள கோஹ்லி, முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை (49 சதம்) சமன் செய்ய இன்னும் 3 சதம் மட்டுமே தேவை.

* ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி இதுவரை 259 இன்னிங்சில் 12,754 ரன் குவித்து 5வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வரிசையில் சச்சின் (18,426 ரன்), சங்கக்கரா (14,234), ரிக்கி பான்டிங் (13,704), ஜெயசூரியா (13,430) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.

* இலங்கைக்கு எதிராக கோஹ்லி விளாசிய 10வது சதம் இது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் 9 சதம் அடித்துள்ளார். சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதம் விளாசியுள்ளார்.

* இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெற்ற 96வது வெற்றி இது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை (நியூசிலாந்துக்கு எதிராக 95 வெற்றி) இந்தியா முந்தியுள்ளது.

* இலங்கை அணி 73 ரன்னுக்கு சுருண்டது, ஒருநாள் போட்டிகளில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது. முன்னதாக, அந்த அணி 1984 ஆசிய கோப்பை போட்டியில் (ஷார்ஜா) 96 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது.

Related Stories: