மாவட்டங்களில் ‘கலைச் சங்கமம்’ என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ‘கலைச் சங்கமம்’ என்ற  பெயரில் 160 கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  தொடங்கி வைத்து பேசியதாவது: திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய  மக்களின் மொழியில் பேசியது.

திராவிட இயக்கம்  கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது. நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி, மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. அதனால்தான் 2022-23ம் ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் கலை, பண்பாட்டுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.48 கோடிக்கு மேலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ‘கலைச் சங்கமம்’ என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகள் நடத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுக் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வழங்குவதற்கு தலா ரூ.10 ஆயிரம்  வீதம் நிதியுதவி வழங்க ரூ.50 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் மிகப்பெரிய கலைக் கொண்டாட்டமாக நடக்கும் இந்தக் கலைவிழாக்கள், சென்னை மாநகரில் 18 இடங்களில் நிகழ்த்தப்பட இருக்கிறது. இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.சென்னை மக்களின் நாவுக்கு விருந்தளிக்கும் உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களின் தனிச்சிறப்பான உணவு வகைகள் உங்களுக்காகப் பரிமாறப்படும். இலக்கியத் திருவிழாவும் நடக்கவிருக்கிறது என்றார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: