சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழாவை தொடர்ந்து 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை இலக்கிய சங்கமம் நிகழ்ச்சி: கலை பண்பாட்டு துறை தகவல்

சென்னை: கலை பண்பாட்டுத் துறை வெளியிட்ட அறிக்கை: கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப் பெறவுள்ள சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவின் ஓர் அங்கமாகத் தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்பெறும் “இலக்கியச் சங்கமம் நிகழ்ச்சிகள் சென்னை அடையாறு ராஜரத்தினம் அரங்கம், முத்தமிழ்ப் பேரவையில் வரும் 14ம் தேதி முதல் 17ம் நாள் வரை நடைபெறுகிறது.  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற  உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் தலைவர் சந்திர மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் முன்னிலை உரையாற்றுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், சு. வெங்கடேசன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ராஜேந்திரன், சிறப்புரையாற்றுகின்றனர்.  சட்டமன்ற உறுப்பினர் த.வேலு முன்னிலை உரையாற்றுகின்றார்.

அதைத் தொடர்ந்து 15ம் ஞாயிற்றுக்கிழமை பவா.செல்லத்துரை பெருங்கதையாடல் நிகழ்வும்,லெனின் தலைமையில் “மாற்று சினிமா குறித்து யோசிப்போம்” என்னும் பொருண்மையிலான நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் இயக்குநர்கள் ராஜேஸ்வர், பி.சி.ஸ்ரீராம், மிஷ்கின்,ஞானவேல் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர்  உரையாற்றுகின்றனர். 16ம் தேதி திங்கள்கிழமை மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் “திராவிட இயக்க இலக்கிய இயல்” குறித்துக் கல்லூரி மாணவர்களோடு ஓர் உரையாடல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் திருநாவுக்கரசு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன், எழுத்தாளர் இமையம், பேராசிரியர் அ.ராமசாமி, முருகேச பாண்டியன், கவிஞர் அறிவுமதி, கோவி லெனின், சந்தியா நடராஜன் ஆகியோர்  உரையாற்றுகின்றனர். மாலை 6  மணியளவில் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நாவல் கருத்தரங்கம் நடைபெறும். இதில் திலகவதி, ஜோடிகுருஸ், வேணுகோபால், வெங்கடேசன், முத்துநாகு, கோபாலகிருஷ்ணன், வெண்ணிலா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

17ம் தேதி காலை 10 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன் “நூறு பூக்கள் மலரட்டும்” என்னும் கவியரங்கத்தினைத் தொடங்கி வைக்கிறார். கவிஞர் கலாப்ரியா தலைமையில்  நடைபெறும் இந்நிகழ்வில் சேலம் ஆர்.குப்புசாமி  “கவிதை இயல்” குறித்து உரையாற்றவும் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி முன்னிலையுரையாற்றவும் உள்ளனர்.  இதனைத் தொடர்ந்து நடைபெறும் “கவிதை வாசிப்பு” என்னும் நிகழ்வில் 50 கவிஞர்கள் கவிதை வாசிக்க உள்ளனர். மாலை 6   மணியளவில்  சென்னை கலைக்குழு வழங்கும் ‘கனவுகள் கற்பிதங்கள்’  மற்றும்  திருமதி ரோகிணி அவர்கள் நடிக்கும் “வீழோம்” என்னும் ஓராள் நாடகம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: