வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி தனியார் தொலைதொடர்பு சேவையை தவறாக பயன்படுத்திய வாலிபர் கைது: சவுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 சிம்பாக்ஸ்கள், 1,700 சிம்கார்டுகள் பறிமுதல்

சென்னை: வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி தனியார் தொலை தொடர்பு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்திய கேரள வாலிபரை போலீசார் கைது ெசய்தனர். மேலும், மோசடிக்கு சவுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 சிம்பாக்ஸ்கள் மற்றும் 1,700 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல தனியார் தொலைதொடர்புத் துறை நிறுவனத்தை சேர்ந்த மண்டல அதிகாரி ஒருவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் தொலை தொடர்பு சாதனத்தை சிலர் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி, வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி எங்கள் நிறுவனத்திற்கு அதிகளவில்  இழப்பை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமான தொலை தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான சிம்கார்டுகள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்திய 9 சிம்பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பஷீர் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சவுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவருடன் வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக சவுதியில் உள்ள அப்துல் ரஹ்மான் மூலம் 1,700 சிம்கார்டுகள் மற்றும் 15 சிம்பாக்ஸ்கள் அனுப்பிள்ளார். பிறகு அப்துல் ரஹ்மான் ஆலோசனைப்படி பஷீர் சென்னையில் ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை மற்றும் சிஐடி நகரில் சட்டவிரோதமாக டெலிகாம் எக்சேஞ்கள் அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ராயப்பேட்டை மற்றும் சிஐடி நகர் ஆகிய 2 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்து 1,700 சிம்கார்டுகள் மற்றும் 15 சிம்பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த மோசடியில் சவுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் உடன் பஷீர் ஈடுபட்டுள்ளதால், வேறு ஏதேனும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மோசடியின் பின்னணியில் வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளதால், கைது செய்யப்பட்டுள்ள பஷிரை காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு ெசய்துள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகு தான் இந்த மோசடி குறித்து முழுமையாக விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: