43 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளை பெண் தாதா கூட்டாளிகளுடன் கைது: ரூ.5 கோடி ஹவாலா பணத்தை திருட சென்றபோது சிக்கினர்

வேடசந்தூர்: 43 சவரன், ரூ.18 லட்சம் கொள்ளையடித்த பெண் தாதா, தனது கூட்டாளிகளுடன் ரூ.5 கோடி ஹவாலா பணத்தை திருட சென்றபோது போலீசிடம் சிக்கி கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சாலையூரை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த டிச. 26ம் தேதி இரவு சீனிவாசன் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல், சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 5 பீரோக்களை உடைத்து  43 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையரை தேடி வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் - திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் நேற்று காலை வேகமாக வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்ததும், வாணியம்பாடி பகுதியில் ரூ.5 கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன், புதிதாக இடம் வாங்குவதற்காக பூந்தமல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரும் சர்வதேச மனித உரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளருமான தீனதயாளனிடம் ரூ.4 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார்.

இவரது தோழி மதுரை உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த ஜோதி (கூலிப்படை தலைவி), மதுரை மாவட்ட செயலாளராக உள்ளார். சீனிவாசன் வீட்டில் பணம்,  நகைகள் உள்ளதாக தீனதயாளன், ஜோதியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஜோதி தனது நண்பரான சென்னையில் போலீசாக வேலை பார்த்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட செல்வக்குமாருடன் சேர்ந்து சேலம், நாமக்கல், ஓசூர் பகுதிகளை சேர்ந்த 16 பேர் அடங்கிய கூலிப்படையை அமைத்து சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமார், ஜோதி, தீனதயாளன், சிராஜுதீன், சதீஷ், சுரேஷ், ரகு, பாஸ்கர் ஆகிய 8 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம், 21 பவுன் நகைகள், ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 8 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: