உத்தரகாண்டில் புதையும் நகரம் 600 குடும்பங்கள் வெளியேற்றம்: முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேரில் ஆய்வு

டேராடூன்: உத்தரகாண்டில் மண்ணில் புதையும் ஜோஷிமத் நகரில் இருந்து 600 குடும்பங்களை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு முதல்வர் புஷ்கர்சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் உத்தரகாண்ட். இங்கு ரிஷிகேஷ்-பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற கிராமம். இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். ரிஷிகேஷ் மற்றும் பத்திரிநாத்துக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களும் இந்த கிராமத்தை தாண்டிதான் செல்லவேண்டும். மேலும் பனிமூடிய சிகரங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் ராணுவ வாகனங்களும் இக்கிராமத்தை தாண்டியே செல்ல வேண்டும்.

இப்படி பல சிறப்புகளை கொண்ட ஜோஷ்மத் கிராமத்தில்   கட்டுமானங்கள் அதிகரித்தன. இதனால் பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. சிங்தார் பகுதியில் உள்ள ஒரு கோவிலும் இடிந்தது. அடுத்தடுத்து பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் மேலும் ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். உடனே முதல்வர் புஷ்கர்சிங் தாமி வீடியோ கான்பரன் சிங் மூலம் அப்பகுதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கிஇருந்த 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது உரிய உதவிகள் வழங்கப்படும் என்று மக்களுக்கு தெரிவித்தார். மேலும் மக்களுக்கு உதவ அங்கு அதிகாரிகள், மருத்துவ குழுக்கள் முகாமிட்டுள்ளனர். மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்க வேண்டும் என்று ஜோதி பீடு சங்கராச்சாரியாா சுவாமி அவிமுக்தீஸ்வரனாந்த் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

* 6 மாதங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம்

இந்துக்கள் புனித யாத்திரை செல்லும் பத்திரிநாத், சீக்கியர்களின் புனித தலமான ஹேம்குந்த் சாகிப் பகுதிக்கு செல்ல ஜோஷிமத் வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே முக்கிய வழித்தடமாக உள்ள அங்கு மக்களை காப்பாற்ற ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நீர்மின் திட்டம், சாலைப்பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வீடுகளை காலி செய்யும் மக்களுக்கு அடுத்த 6 மாதத்திற்கு தலா ரூ.4 ஆயிரம் வீட்டு வாடகை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: