வண்டலூரில் ஜனவரி 9 முதல் 13ம் தேதி வரை 23வது காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: 33 மாநிலங்கள், யூனியன் பிரதேச காவல் துறையினர் பங்கேற்பு

சென்னை: 23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி ஜனவரி 9 முதல் 13 ம் தேதி வரை வண்டலூரில் நடக்கிறது. இதில் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த போலீசார் பங்கேற்கின்றனர். சென்னை அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில், 23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியை தமிழ்நாடு காவல்துறை நடத்துகிறது. இது, 9ம் தேதி துவங்கி 13ம் தேதி நிறைவு பெறுகிறது. இதன், துவக்கவிழா சென்னை வண்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறை  தலைமை இயக்குநர் மற்றும் படை தலைவர் சைலேந்திர பாபு  ஜனவரி 9ம் தேதியன்று மாலை 4.30 மணியாளவில் தொடங்கி வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜனவரி 13ம் தேதியன்று மாலை 5 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிறைவு விழாவிற்கு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளார். இப்போட்டியில், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுவார்கள்.

Related Stories: