தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் கூற வேண்டிய அவசியம் இல்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

வேலூர்: தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என ஆளுநர் கூற வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பது என்பது நமக்குதான் தெரியும். தமிழகம் என்பதற்கும், தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனால், தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு. இதுபோன்று பல நாடுகள் சேர்ந்ததுதான் நமது இந்திய அரசு. இது நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. 500-க்கு மேற்பட்ட சமஸ்தானங்கள் சேர்ந்ததுதான் இந்தியா.

இந்தியா என்று ஒரு நாடு இல்லை. இந்தியா என்பது தேசம். ஆளுநர் கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பாஜக நமது கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை வேறு கலாச்சாரத்தில் உள்ளனர். கலாச்சார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். தொடர்ந்து ராகுல் காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; ராகுல் காந்தி உடனான கமலஹாசனின் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது, உளமாற பாராட்டுகிறது.

கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி சந்திப்பு வரவேற்கக் கூடிய ஒன்று. கமல்ஹாசன் ஒரு தேசிய உணர்வு உடைய தமிழர். சீர்கருத்துக்களை உடையவர். இன்றைய காலகட்டத்தில், ராகுல் காந்தி தான் இந்திய தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று கமல்ஹாசன் உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடு தான் கமல்ஹாசன் ராகுல் காந்தி சந்திப்பு என்று தெரிவித்தார்.

Related Stories: