கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் மதுபானம் கடத்திய 4 வாலிபர்கள் கைது-₹5 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் : கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் மதுபானம் கடத்திய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் பரவலாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலால் ஆணையர் பானுவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின்பேரில், கலால் ஆணையர் பானு, போலீசார் திருப்பத்தூர் அடுத்த கந்திலி நரியநேரி கூட்ரோடில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பதிவு எண் இல்லாமல் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், ₹5 லட்சம் மதிப்புள்ள 2,496 மதுபாட்டில்கள் கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.  தொடர்ந்து, காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(28), திருப்பத்தூர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த விக்னேஷ்(28), திருப்பதி(29), கலையரசன்(31) ஆகிய 4 பேரையும் பிடித்து, மாவட்ட மதுவிலக்கு தடுப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், மதுபாக்கெட்கள், காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: