திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயிலில் பவுர்ணமி மகா சண்டியாகம்-கோயில் புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

திருப்பதி : திருப்பதியில் புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயிலில் பவுர்ணமி மகா சண்டியாகத்துடன் புதுப்பிக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் கோயிலை புதுப்பித்து புனரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திருப்பதி எம்எல்ஏ கருணாகர ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பதி மேயர் சிரிஷா, துணை மேயர் அபிநய் ரெட்டி, கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 இதையொட்டி திருப்பதி இந்திரா மைதானத்தில் இருந்து மேளதாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள்  முழங்க கடவுள் வேடமிட்ட நடன கலைஞர்களுடன் ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு  பூஜைகள் செய்தனர். முன்னதாக பவுர்ணமியை முன்னிட்டு மகா சண்டி யாகம் நடைபெற்றது. இதுகுறித்து எம்எல்ஏ கருணாகர ரெட்டி கூறுகையில், ‘திருப்பதியில் எல்லை தெய்வமாகவும் வெங்கடேஸ்வர ஸ்வாமியின் சகோதரியாகவும் இருந்து அனைவருக்கும் அருள்பாலிக்கும் கெங்கையம்மன் கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து விரைவில் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன பாக்கியம் கிடைக்கும் வகையில் சிறப்பாக செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: